Banner

Banner

தொல்லியல் அறிவோம் -4

 

வெளிநாட்டு வணிகர்கள்



        

சங்க காலத்திற்கு முன்பிருந்தே பல வெளிநாட்டினர் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
. இவ்வணிகத் தொடர்பு கி.பி.16ஆம் நூற்றாண்டில் அதிக அளவில் நடைபெற்றது. போர்த்துக்கீசியர், பிரான்சு, டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாட்டினர் கடல் வழியாக வணிகம் செய்தனர். இந்த வணிகக் குழுவை "கிழக்கிந்தியக் கம்பெனிகள்" என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். கி.பி.16ம் நூற்றாண்டில் தமிழகத்தில் அரசியலில் குழப்பம் அதிகம் இருந்ததால் கிழக்கிந்தியக் கம்பெனிகளிடம் அரசர்கள் கடன் பெற்றனர். அக்கடனை திரும்பத் தர இயலாததால் அரசர்கள் சில பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு விற்றுவிட்டனர். கிழக்கிந்தியக் கம்பெனியினர் வணிகத்திற்காகவும், வரிவசூல் செய்வதற்காகவும் தங்களுடன் ஒரு நிர்வாகக் குழுவை இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். அக்குழுவில் நிலவியல் ஆய்வாளர், நிலஅளவை செய்பவர்கள், மதகுருமார்கள், ஓவியர்கள், காவலர்கள், வியாபாரிகள் போன்று பலர் இருந்தனர். இவர்கள் வியாபாரக் குழுவின் பகுதியாகவே செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வாணிபத்தின் பொருட்டு தமிழகத்திற்கு வந்தவர்கள் தமிழகத்திலிருந்த கோயில்கள், கோட்டைகள், நகர அமைப்புகள் போன்றவற்றை ஓவியமாகத் தீட்டிச் சென்று அவற்றை அவர்களுடைய நாட்டில் விற்பனை செய்தனர். இதன் விளைவாக இங்கிருந்த பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய விபரங்களை சேகரித்து இவை எக்காலத்தைச் சார்ந்தவை என்றும் இதன் பெயரால் கூறப்படும் கதைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தொகுத்து ஆய்வுக் கட்டுரையாக வெளிநாட்டில் வெளியிட்டனர். இதனால் தமிழகத்திலிருந்த கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் போன்றவற்றை வெளி நாட்டுக் கற்காலங்களுடன் ஒப்பு நோக்கி விபரங்களை ஆய்வுக்கட்டுரைகளாக வெளி நாட்டில் வெளியிட்டனர்.

    இந்தியாவின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதால் இந்தியாவிலும் வெளியிட முற்பட்டனர். இந்தியாவில் அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்கின் ஒப்புதலுடன் கி.பி.1784ல் ஆசியாடிக் கழகத்தை சர் வில்லியம் ஜோன் என்பவரால் நிறுவப்பட்டது. ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தல், அருங்காட்சியகங்கள் அமைத்தல், ஆய்வாளர்களை ஊக்குவித்தல், கூட்டங்கள், ஆய்வரங்கங்கள், விவாதங்கள் நடத்துதல், புத்தகங்கள் வெளியிடுதல் ஆகியன இந்த அமைப்பின் பணிகளாக இருந்தன.

    சென்னை அருங்காட்சியகம் தமிழ்நாட்டில் கிடைத்த தொல்பொருட்கள் சேகரித்து வைக்க உருவாக்கப்பட்ட முதல் அருங்காட்சியம். இதில் சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் போன்றன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தொன்மையையும், பெருமையையும் வெளிநாடுகளில் பரப்பியதுடன், உள்நாட்டிலும் பரப்பினர். இவர்களை முன்னோடிகளாகக் கொண்டு உள்நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முற்பட்டனர். நம்முடைய பண்பாட்டையும், பெருமையும் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் பரப்பியவர்கள் வெளிநாடு ஆய்வாளர்கள் என்றால் இது மிகையாகாது.



Post a Comment

0 Comments